யு.எஸ்.தமிழன்

தமிழனின் பார்வையில் அமெரிக்கா

ஈராக்ன் போர் – அமெரிக்காவின் அவசியம்

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 20, 2007

ஈராக் போரை நிறுத்தி/முடித்துவிட்டு படைகளை விலக்கிக் கொள்வதில் அமெரிக்காவிற்கு பல சிக்கல்கள் உள்ளன.

IINK

நவம்பர் 2006 மத்தியில் ஈராக்கில் 152,000 அமெரிக்க படை வீரர்கள் அமர்தப்பட்டிருந்தனர். கடந்த மாதம் படை பலத்தை இன்னும் உயர்த்தவேண்டும் என அதிபர் புஷ் குறிப்பிட்டிருந்தார். பிரதிநிதிகள் சபையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டாலும், புஷ் தன் அதிகாரத்தைக் கொண்டு மேலும் 21,500 படை வீரர்களை அனுப்புவார் என்றே தெரிகிறது. இதன் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 173,500+ ஆக உயரக்கூடிய வாய்ப்புள்ளது.

ஈராக் போருக்கான அமெரிக்க மக்களின் ஆதரவு தேய்ந்துவரும் இத்தருணத்தில் படைகளை குறைக்கச் சொல்லி ஜனநாயக கட்சியினர் புஷ்சிற்கு குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க படைகளை குறைப்பதினால் அமெரிக்காவிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். திரும்ப வரும் படை வீரர்களுக்கு வழங்க தேவையான பணியிடங்கள் காலியாக இல்லை. இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் வாய்புகள் உண்டு. சற்றே முன்னேறி வரும் அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் சரியத்துவங்கிவிடும். 2000த்தின் டாட்.காம் சரிவிலிருந்து மெதுவாக உயிர்பெற்றிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் மற்றொரு சரிவை சந்திக்க தயாராக இல்லை. மேலும் ஏற்கனவே துவண்டுகொண்டிருக்கும் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுடன் இந்த வேலையில்லா திண்டாட்டமும் கைக்கோர்த்துக் கொண்டால் அது அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.

அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவுகள் போர்களுக்கு பின்பு ஏற்பட்டவை என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

ஈராக் போர் முடிவின்றி நீண்டுகொண்டே போவதாலும் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போவதால் புஷ் பெரும் நெருக்கடியில் இப்போது உள்ளார். மக்களின் ஆதரவின்மையினாலோ, ஜனநாயகக்கட்சி ஒத்துழைக்க மறுப்பதாலோ புஷ் படைகளை விலக்கிக்கொண்டால் அது மாபெரும் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவிக்கும். அதனால் புஷ் படைவீரர்களை அமெரிக்காவிற்கு திருப்பப்பெருவார் என்று எண்ணுவதற்கில்லை. அப்படியே அவர் படைவீரர்களை திருப்பப்பெற்றாலும் அவரின் பதவி முடிவதற்கு மிக அருகிலேயே அந்த முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் புஷ்ஷின் பதவிகாலத்தில் எந்த பொருளாதார பின்னடைவுகளும் இன்றி அவர் ஆட்சியைவிட்டு விலகிடும் வாய்ப்புகள் உள்ளது.

இதை அறிந்தே அடுத்த ஆட்சியை பிடிக்க கனவுகாணும் ஜனநாயகக் கட்சியும் புஷ்ஷை படைகளை இப்போதே குறைக்கச்சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இந்த கண்ணாமூச்சிகளுக்கெல்லாம் அசரக்கூடிய ஆளாக புஷ் இல்லை என்பது அவரது சமிபத்திய பேச்சுகளில் தெளிவாக உள்ளது. பிரதிநிதிகள் சபை அவருடைய படை அதிகரிப்பிற்கான மனுவை நிராகரித்ததை புஷ் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இரு சபைகளும் நிராகரித்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது எண்ணத்தை செயல்படுத்துவார் என்பது கண்கூடாக தெரிகிறது. அப்படியே நெருக்கடி அதிகமானால் தனது பதவிகாலம் முடிவுறும் தருவாயில் படைகளை விலக்கிக்கொண்டு தனகு பிறகு வரும் ஆட்சியாளருக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை கொடுக்க புஷ் தயங்க மாட்டார்.

IraqIran

சரி அப்படியே மக்கள் ஜனநாயகக் கட்சியின் துணையுடன் ஒரு எழுச்சி போராட்டம் நடத்தினால் (அப்படி நடத்த முதுகெலும்லில்லாத ஜனநாயக கட்சியில் ஒரு தலைமையில்லை என்பதே உண்மை)? இருக்கவே இருக்கிறது ஈரான். படைகளை விலக்கிக்கொள்வதைத்தவிர புஷ்ஷின் கையில் உள்ள ஒரே மாற்று உபாயம் ஈரான். ஈரானின் செயலும் அதற்கு துணைபுரிவதாகவே உள்ளது. ஈரானின் சமிபத்திய அணு சோதனைகளை காரணம்காட்டி ஈரானின் மீது போர்த்தொடுக்க அமெரிக்க படைகளின் கைகளில் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு. பிபிசி செய்தியும் அதையே உறுதிசெய்கிறது. ஈரானின் அணு சோதனைகள் அயுதத்தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றதென்றோ ஈராக் “தீவிரவாதிகளுக்கு” ஈரான் அயுத உதவி வழங்குகிறதென்றோ அமெரிக்கா நிறுவித்தால் ஈரான் போர் தவிர்க்கமுடியாதாகிவிடும். இதில் இரண்டாவது காரணம் தமிழ்நாட்டு கஞ்சா வழக்குபோல எளிதில் அமெரிக்காவினால் ஜோடிக்க முடியும்.

அதனால் ஈரானின் போர் புஷ்ஷிற்கு உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை பொருத்தே அமையும்.

யு.எஸ்.தமிழன்

Posted in அரசியல் | 13 Comments »

ஈராக் படைபல அதிகரிப்புக் கோரிக்கை நிராகரிப்பு

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 17, 2007

ஈராக்கிற்கு மேலும் படைகளை அனுப்ப வேண்டி புஷ் வைத்த கோரிக்கையை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிராகரித்துவிட்டது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளில் பெரும்பான்மை பலத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் குடியரசு கட்சி சில முக்கிய மாகாணங்களில் பதவி இழந்ததால், இரு சபைகளின் பெரும்பான்மை பலம் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் கைக்கு மாறியது. இவ்வாறு மாறியபோதே குடியரசு கட்சியோ, புஷ்ஷோ தீட்டும் ஒவ்வொரு திட்டமும் பெருத்த மோதலுக்கு பிறகே நிராகரிக்கவோ ஏற்கவோ படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த வருடங்களில் புஷ் படைபல அதிகரிப்போ, போருக்கான நிதியோ கோரும் போது எந்த தடங்கலும் இல்லாமல் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பெரும்பான்மை இழந்தபிறகு புஷ்ஷிற்கோ அவரது கட்சியினருக்கோ இந்த நிராகரிப்பு எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்க போவதில்லை.

திட்டமிட்டு காய்களை நகர்த்துவதில் குடியரசு கட்சிக்கோ, புஷ்ஷிற்கோ நிகர் யாருமில்லை. டெக்ஸாஸ் மாநில கவர்னராக போட்டியிட்ட போதே புஷ் தனது எதிராளிகளை பயன்படுத்தி எந்த பெரிய மக்கள் நல கொள்கைகளையும் முன்நிறுத்தாமல் வென்றவர். அதனால் இந்த நிராகரிப்பை எதிர்நோக்கியே அவர்கள் காய் நகர்த்துவார்கள். ஒரு வகையில் இவை அனைத்துமே குடியரசு கட்சியின் திட்டமோ என்றே எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

படைபல அதிகரிப்பை இந்த முறை வேண்டியது ஜான் மெக்கெய்ன். அவர் ஈராக்கிற்கு சென்று அங்குள்ள நிலமையை படை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே இந்த அதிகரிப்பு ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த ஆலோசனையை புஷ்ஷிற்கு முன்மொழிந்தது கன்சர்வேடிவ் குடியரசு கட்சி அமைப்பாளர்களின் அபிமானத்தை பெறுவதற்கே என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் ஆதரவின்றி மெக்கெய்ன் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினம். மெக்கெய்னை “Democrats favorite Republican” என்று கிண்டலும் அடித்ததுண்டு. இந்த வார்ப்புகளில் இருந்து பிரித்து தன்னை குடியரசு கட்சியின் அபிமானியாக நிலைநிறுத்திக்கொள்ளவே மெக்கெய்ன் படைபல அதிகரிப்பை கோரியிருக்க முடியும். அதை சரியான நேரத்தில் உபயோகித்துக் கொண்டதே புஷ்ஷின் சாமர்த்தியம்.

McCain Pact

அடுத்து, போருக்காக புஷ் கோரியிருந்த 93 பில்லியன் டாலருக்கான மனுவும் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. போரில் வெற்றிபெரும் வாய்ப்போ அல்லது படைகளை திரும்பப்பெருவதற்கான சாத்தியங்களோ மிகவும் குறைவு என்பது புஷ்ஷின் சகாக்கள் அறியாதது அல்ல. அதை அறிந்தே இந்த திட்டங்கள் யாவும் தீட்டப்பட்டிருக்கலாம். போரில் தோல்வி அடைந்ததும், அதற்கான காரணமாக ஜனநாயகக் கட்சியின் இந்த முடிவுகளை எடுத்துக் காட்டமுடியும். ஜனநாயகக் கட்சி, படைபல அதிகரிப்பையும் போர் நிதிக்கான கோரிக்கைகளையும் நிராகரித்த காரணத்தினால்தான் போரில் தோல்வியும் படைச் சேதமும் ஏற்பட்டது என குடியரசு கட்சி குற்றம்சாட்ட இதை தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளும். அதை அமெரிக்க மக்கள் நம்பி மெக்கெய்னை அடுத்த அதிபராக தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமெரிக்கர்களைப் பொறுத்தமட்டில் கறுப்பு இன ஒபாமாவையும், பெண்னான் ஹிலாரியையும் விட, ‘The Man in the Middle’ ஜான் மெக்கெய்னை அதிபராக தேர்ந்தெடுக்க முன்வரலாம்!

Posted in அரசியல் | Leave a Comment »

அடுத்த ஜனாதிபதி

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 15, 2007

பராக் ஓபாமா இல்லினாய் மாநில செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என கணிக்கப்பட்டது. அதை ஒபாமா கடந்த மாத அறிவிப்பில் உறுதி செய்தார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவி நியுயார்க் செனட்டர் ஹிலாரி, சென்ற தேர்தலின் போது துணையதிபர் போட்டியில் போட்டியிட்ட ஜான் எட்வர்ட் முதலிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஊடகங்கள் ஒபாமாவை முன்னிலைப்படுத்தினாலும் ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அமெரிக்கா இன்னும் அடையவில்லையென்றே எண்ணவேண்டியதுள்ளது. அதைப்போலவே அமெரிக்காவின் கன்சர்வேடிக் குடியரசு கட்சி ஆளுமையில் உள்ள மாநிலங்களில் ஹிலாரிக்கு ஆதரவு கிடைப்பது சிரமமே. குடியரசு கட்சி மட்டுமல்லாது, தனது சொந்த கட்சியான ஜனநாயக கட்சியிலும் அவருக்கு முழு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஹிலாரி அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரின் வெற்றி குடியரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுபவரை பொருத்தே இருக்கும்.

குடியரசு கட்சியின் சார்பாக செனட்டர் மெக் கெய்ன் போட்டியிட வாய்புள்ளது. அதிபர் புஷ்சின் அபிமானம் பெரிதும் இறங்கிவரும் இக்காலகட்டத்தில் புஷ்சின் சகோதரரான ப்ளோரிடா மாநில கவர்னர் ஜெப் புஷ் களமிறங்குவது பெருத்த சந்தேகமே. மேலும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளில் இருக்கும் கன்சர்வேட்டிவ்கள் ஒரு கறுப்பினத்தவரோ, பெண்ணோ அதிபராக வருவதைக்காட்டிலும் மெக் கெய்ன் வருவதையே விரும்புவார்கள். ஆனாலும் கெய்ன் ஈராக் போரில் புஷ்சின் கொள்கைகளை ஆதரிப்பதினால் அவரின் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் குறைந்து வருவதாக அரசியலறிஞர்கள் கருதுகிறார்கள். அடுத்த தேர்தலிலும் ஜனநாயக கட்சி தோல்வியுறுமானால், அதை தூக்கி நிறுத்த மற்றொரு கென்னடிதான் பிறக்கவேண்டும்.

எப்படியோ, அமெரிக்க மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க மெதுவாக தயாராகிவருகிறார்கள்.

Hillary - Obama

Mccain-Obama

Posted in அரசியல் | 2 Comments »

தமிழ்மணத்திற்காக SHREK II!

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 14, 2007

தமிழ்மணத்தில் இணைய மூன்று கட்டாய பதிவுகள் வேண்டுமாம்! சரி நமக்கு விஜய் பாட்டு போட தெரியாததாலும் Shrek I முன்பே ஒருவர் இட்டுவிட்டதால், உங்களுக்காக SHREK II!

Posted in நகைச்சுவை | Leave a Comment »

இணையும் நிறுவனங்கள்

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 14, 2007

வாஜ்பாய் அரசு பதவி ஏற்பதற்கு முன் என நினைக்கிறேன், இந்தியாவில் ஒரு மின்மடல் வலம்வந்து கொண்டிருந்தது. பல முறை எங்கள் வீட்டிற்கு துண்டு பிரசுரங்களாகவும் வழங்கிவந்தார்கள். அந்த பிரசுரங்களின் சாரம் நாம் சுதேசி பொருட்களையே நுகர வேண்டுமென்றும், அன்னிய பொருட்களை பாவிக்க கூடாது என்பதுமாக இருக்கும். மேலும் நாம் நிதமும் உபயோகிக்கும் ஒரு அன்னிய நாட்டு வணிகப்பொருளை குறிப்பிட்டு அதற்கு நிகரான இந்திய பொருட்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். (அன்னிய நாட்டு லக்ஸ் சோப்பிற்கு பதில் இந்திய லைப்பாய் போன்ற நகைச்சுவைகளும் இதில் அடக்கம்).

தாராளமய உலகமய சூழல் முழுதும் உணரப்படாத காலகட்டமது. சிலர் அதை உண்மையென நம்பி அந்த அட்டவணையில் உள்ள ‘தேசிய’ பொருட்களை வாங்கியவர்களும் இருந்தனர். இன்றைய காலகட்டத்திலும் தாராளமயமாக்கல் சாதாரண மக்களுக்கு பரவலாக எட்டாத புரிபடாத விஷயமாகயிருந்தாலும், அதை ஏற்று வாழக்கற்றுக்கொண்டார்கள்.

உலகமயமாக்கல் போதிக்கப்பட்ட போது இடதுசாரிகளால் உந்தப்பட்டு பெருவாரியான மக்கள் அதை எதிர்க்கவே செய்தனர். இடதுசாரிகள் பெருவாரியான இந்திய நிறுவனங்கள் உலக சந்தையின் தாக்கத்தை சந்திக்க முடியாமல் மடிந்து நொடிந்துவிடும் என்றே ஆருடங்கள் கூறினர்.

சந்தை பொருளாதாரத்தின் அடிநாதமே வல்லவன் வாழ்வான் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். இந்திய நிறுவனங்களை ஏதோ நோஞ்சான் நிறுவனங்களாக இடதுசாரிகள் கணித்து வந்தனர்.

ஆனால் இன்று நடப்பவைகளைப் பார்த்தால் அவர்கள் கணிப்பு பொய்த்துவருவதைக் காணலாம்.

டாடா-கோரஸ், ஹிந்டல்கோ-நோவெலிஸ் போன்ற நிறுவனங்கள் இணைவது உலகமயமாக்கலின் நீட்சி என்றே எண்ணவேண்டியுள்ளது. மேலும் இந்த நிறுவன இணைப்புகள் பலரும் எதிர்பார்த்த கணினி சம்பந்த தொழிலல்லாமல் மற்ற அடிப்படை கட்டுமான துறைகளில் நடந்திருப்பது சிறப்பு.

இந்திய முதலீட்டாளகள் இந்த இணைப்புகளை சந்தேகத்தோடும் கவலையுடனும் நோக்கினாலும், இது ஒரு தேவைப்பட்ட காலத்தின் கட்டாயமாகவே எண்ண வேண்டும். இன்று டாடாவோ மித்தலோ முந்தியடிக்காவிட்டால் மூழ்கடிக்கப்படுவர். இந்திய பங்கு முதலீட்டாளர்கள் சற்றே பிற்போக்கு குணமுள்ளவர்களாக இருந்தாலும், தொலைநோக்கு பார்வையில் இந்த இணைப்புகளால் ஆதாயமடையப்போவதை கணித்திருப்பார்கள். இன்று டாடா, ஹிந்டல்கோ பங்குகளின் விலை சரிவைச்சந்தித்திருப்பது முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பாக கருதவேண்டும். இதைப்போன்ற பங்குகளை ஒருவர் தன்னுடைய ஒய்யூதிய நிதிகளில் சேர்க்க இதுவே தக்க தருணம்.

——>>>——

இதைப்போன்ற இணைப்புகள் இந்தியாவிற்கு புதிதான விஷயம்… ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்காவின் Antitrust சட்டத்திற்கு பயந்து பிரிவதும் இணைவதும் அன்றாட நிகழ்ச்சி. (இந்த Antitrust சட்டத்தை முன்வைத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இரண்டாக உடைக்க நெட்ஸ்கேப் முதலானோர் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து பில் கேட்ஸ் மீள எடுத்த முயற்சிகள் மிக பிரசித்தம்). இதைப்போன்றதொரு பெரிய இணைப்பு சமிபத்தில் Cingular-AT&T பற்றிய காமெடி சென்ட்ரலின் Stephen Colbertன் விளக்க விடியோ கிழே இணைத்திருக்கிறேன்!

Posted in வணிகம் | 2 Comments »

கூகிள் – காப்புரிமை வழக்கு

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 13, 2007

பெல்சியம் நாட்டு பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய மொழி செய்திகளை, கூகிள்  தனது தேடு பொறி தளத்திலும், செய்தி திரட்டியிலும் வெளியிட்டமைக்காக, அந்நாடு கூகிளுக்கெதிராக காப்புரிமை மீறல் வழக்கை துவங்கியிருந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு கூகிளுக்கு சாதகமாக அமையவில்லை. தலைப்புச்  செய்திகளை மட்டுமே கூகிள் வெளியிடுவதாகவும், முழு செய்திகளையும் வாசிக்க குறிப்பிட்ட செய்திதளங்களுக்கு தகுந்த சுட்டிகள் தந்திருப்பதாகவும் கூகிள் செய்த வாதம் பலிக்காமல் போனது.

வழக்கின் தீர்ப்பின்படி கூகிள் தனது திரட்டி சேவையை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் $32500 அமெரிக்க டாலர்களை அபராதமாக் செலுத்த வேண்டும்.

வழக்கின் முடிவு கூகிளுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதிப்பு அந்த செய்தி நிறுவனங்களுக்கே பெரும்பான்மையாக இருக்கும் என்று வலை அறிஞர்கள் கருதுகிறார்கள். பெரும் நிறுவனங்கள் கூகிள் தேடு பொறி முடிவுகளில் தங்கள் நிறுவனம் முதலிடம் வருவதற்கு விளம்பரம் செய்வதற்கு பல அயிரங்களை செலவு செய்யும் இந்த காலகட்டதில் இவ்வழக்கு சற்றே விசித்திரமானதாகும்.

இவ்வழக்கின் முடிவு கூகிள், MSN, யாஹூ போன்ற நிறுவனங்களுடன் நின்றுவிடுவதில்லை. DIGG, DELICIOUS போன்ற திரட்டி சேவைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்மணம், தமிழ் ப்ளாக்ஸ், தேன்கூடு போன்ற திரட்டி சேவைகளும் தங்கள் காப்புரிமையை தூசுதட்டவேண்டியது அவசியம்.

Posted in வணிகம் | Leave a Comment »