யு.எஸ்.தமிழன்

தமிழனின் பார்வையில் அமெரிக்கா

Archive for பிப்ரவரி 15th, 2007

அடுத்த ஜனாதிபதி

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 15, 2007

பராக் ஓபாமா இல்லினாய் மாநில செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என கணிக்கப்பட்டது. அதை ஒபாமா கடந்த மாத அறிவிப்பில் உறுதி செய்தார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவி நியுயார்க் செனட்டர் ஹிலாரி, சென்ற தேர்தலின் போது துணையதிபர் போட்டியில் போட்டியிட்ட ஜான் எட்வர்ட் முதலிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஊடகங்கள் ஒபாமாவை முன்னிலைப்படுத்தினாலும் ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அமெரிக்கா இன்னும் அடையவில்லையென்றே எண்ணவேண்டியதுள்ளது. அதைப்போலவே அமெரிக்காவின் கன்சர்வேடிக் குடியரசு கட்சி ஆளுமையில் உள்ள மாநிலங்களில் ஹிலாரிக்கு ஆதரவு கிடைப்பது சிரமமே. குடியரசு கட்சி மட்டுமல்லாது, தனது சொந்த கட்சியான ஜனநாயக கட்சியிலும் அவருக்கு முழு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஹிலாரி அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரின் வெற்றி குடியரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுபவரை பொருத்தே இருக்கும்.

குடியரசு கட்சியின் சார்பாக செனட்டர் மெக் கெய்ன் போட்டியிட வாய்புள்ளது. அதிபர் புஷ்சின் அபிமானம் பெரிதும் இறங்கிவரும் இக்காலகட்டத்தில் புஷ்சின் சகோதரரான ப்ளோரிடா மாநில கவர்னர் ஜெப் புஷ் களமிறங்குவது பெருத்த சந்தேகமே. மேலும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளில் இருக்கும் கன்சர்வேட்டிவ்கள் ஒரு கறுப்பினத்தவரோ, பெண்ணோ அதிபராக வருவதைக்காட்டிலும் மெக் கெய்ன் வருவதையே விரும்புவார்கள். ஆனாலும் கெய்ன் ஈராக் போரில் புஷ்சின் கொள்கைகளை ஆதரிப்பதினால் அவரின் மீது மக்கள் வைத்திருந்த அபிமானமும் குறைந்து வருவதாக அரசியலறிஞர்கள் கருதுகிறார்கள். அடுத்த தேர்தலிலும் ஜனநாயக கட்சி தோல்வியுறுமானால், அதை தூக்கி நிறுத்த மற்றொரு கென்னடிதான் பிறக்கவேண்டும்.

எப்படியோ, அமெரிக்க மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க மெதுவாக தயாராகிவருகிறார்கள்.

Hillary - Obama

Mccain-Obama

Posted in அரசியல் | 2 Comments »